Wednesday, January 4, 2012

Indiyavin nilai

ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்றால், அரசியல் கட்சியையும் நடத்தலாம் என்பதுதான் பாஜக-வின் நிலைப்பாடு போலத் தெரிகிறது. இல்லாவிட்டால், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபு சிங் குஷ்வாகாவைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு, இப்போது உள்ளும் புறமுமாய் எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்குமா?
 "சுகாதார முறைகேடு வழக்கு விசாரணையில் இந்த அளவுக்குத் தீவிரம் காட்டப்படுவது அரசியல் ஆதாயத்துக்காகத்தான். குஷ்வாகா மீது வழக்குப் பதிவு செய்திருப்பதும் அவரது நிறுவனங்களில் சிபிஐ நடத்திய சோதனைகளும் தேர்தல் நேர வாக்கு சேகரிக்கும் உத்திகள்; குஷ்வாகா நிரபராதி' என்று பாஜக கூறுவது உண்மை என்றால், இதுநாள்வரை குஷ்வாகாவை குறை கூறிக்கொண்டிருந்த பாஜக, இப்போது அவரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டதும் தேர்தல் நேர வாக்கு சேகரிக்கும் உத்திதானே!
 உத்தரப் பிரதேசத் தேர்தல் களத்தில், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை காங்கிரஸ் களமிறக்க, அவருக்குச் சமமான பிரசார பீரங்கியாக அதே மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதியை களம் இறக்கிய பாஜகவின் தேர்தல் வியூகம், குஷ்வாகா விவகாரத்தால் பிசுபிசுத்துவிட்டது.
 இத்தனைக் காலம், உ.பி. மாநிலத்தின் சுகாதாரத் துறை ஊழலுக்கு மாநில முதல்வர் மாயாவதியையும், குஷ்வாகாவையும் குற்றம் சாட்டிய பாஜக, அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்ட மறுநாளே அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யும் என்பதை எதிர்பார்க்கவில்லை. கட்சிக்குள்ளும் வெளியிலும் ஏற்பட்ட விமர்சனங்களைத் தொடர்ந்து, "குஷ்வாகாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க மாட்டோம்' என்றும், "மாயாவதிதான் எல்லா ஊழலையும் செய்தார்; குஷ்வாகா அப்பாவி' என்பதும், "ஊழலை எங்கே யார் செய்தாலும் நாங்கள் கண்டிப்போம்; குஷ்வாகா மீது விசாரணை நடத்தட்டும்; ஆனால் நேர்மையாக, பாரபட்சம் இல்லாமல் நடத்த வேண்டும்' என்று சொல்வதும் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை மேலும் அம்பலப்படுத்துகின்றன.
 இந்த ஆண்டின் தொடக்க நாளிலேயே, குஷ்வாகா மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. அதை பாஜக உணர்ந்துகொண்டு, அவரைக் கட்சியில் சேர்ப்பதைத் தவிர்த்திருந்தால், அல்லது தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம் எனக் காலம் கடத்தியிருந்தால், இப்போது இத்தனை சிக்கலுக்கு ஆளாகியிருக்க நேர்ந்திருக்காது.
 மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் என்றும், பகுஜன் சமாஜ் கட்சியின் பலம் என்றும், மாயாவதியின் அரசியல் முடிவுகளுக்குப் பின்புல இயக்குநர் என்றும் பேசப்பட்டவர் குஷ்வாகா. இருப்பினும், தொடர்ந்து இரண்டு தலைமை மருத்துவ அதிகாரிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில், சுகாதாரத் துறை ஊழல் மூடிமறைக்க முடியாமல் முடைநாற்றமெடுத்தது. வேறு வழியே இல்லாமல்தான், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் பதவி விலக வேண்டியிருந்தது.
 ஊழல் குற்றச்சாட்டினால் கறைபடிந்த அமைச்சர்கள், அல்லது கட்சிப் பிரமுகர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, அல்லது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ தங்களுக்கு அரசியல் புகலிடம் தேடி ஏதாவது ஒரு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வது என்பது இந்திய மரபாகவே மாறிவிட்டது.
 இந்த அரசியல் மரபு இரண்டு விதமாக இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது. முதலாவதாக, இத்தகைய ஊழல் பேர்வழிகள் மண்டல அளவிலான, அல்லது குறிப்பிட்ட பகுதி அளவிலான பிரமுகர்கள் என்றால், அவர்களை ஏதோ மனம் திருந்திய மைந்தர்களைச் சேர்த்துக்கொள்வதைப் போல மிக இயல்பாக எதிர்க்கட்சிகள் சேர்த்துக் கொள்கின்றன. இந்த எதிர்க்கட்சிகள் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரும்போது, இவர்கள் மீதான வழக்குகள் யாவும் பொய்வழக்குகளாக, ஆதாரம் இல்லாத வழக்குகளாக மாறிப்போகின்றன.
 இரண்டாவது வகை, மிகப் பெரும் ஊழல் திமிங்கலங்களுக்கு உரியவை. ஆட்சி அதிகாரத்தில் இடம்பெற்று, அமைச்சராகவும், கட்சியில் உயர் பொறுப்பிலும் இருந்து கோடிகோடியாய் ஊழல் செய்து மாட்டிக் கொண்டவர்களைச் சேர்த்துக் கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்குக் கொஞ்சம் தயக்கம் உண்டு. ஆகவே, இந்த தயக்கத்தைப் போக்கும் வகையிலும், ஊழலில் சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி, எதிர்க்கட்சிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கூட்டணியிலும் சேர்ந்துகொள்வார்கள்.
 தன் மீதான களங்கம் நீங்கும் வரை, வேறு அரசியல் கட்சியில் சேராமலும், எந்த அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்காமலும் அரசியல் துறவறம் மேற்கொள்பவர்கள் இப்போது அழிந்துபோன அரிய மனித வகையாக ஆகிவிட்டது.
 இப்படிப்பட்ட கறைபடிந்த அரசியல்வாதிகளைச் சேர்த்துக்கொள்வதில் எதிர்க்கட்சிகள் தயக்கம் காட்டிவந்த நிலைமையும் இன்று தேசிய அரசியலில் மாறிவிட்டது. தேர்தல் நேரத்தில் யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது.
 ஒரு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த விரும்பும் மக்கள் முன்பாக, கறைபடிந்த அரசியல்வாதிகளைக் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக நிறுத்துவதால், அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் திணிக்கப்படுகிறது. கட்சித் தலைமைகளே முடிவெடுத்து, யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வதும், யாரை வேண்டுமானாலும் தேர்தலில் நிறுத்துவதும் தொடருமானால், ஊழலும் தொடரத்தான் செய்யும்.
 உண்மையாகவே அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், முறையான உள்கட்சி ஜனநாயகம் எல்லா அரசியல் கட்சிகளிலும் ஏற்பட வேண்டும். உள்கட்சித் தேர்தல்கள் முறையாக நடத்துவதுபோல, வேட்பாளர் தேர்வும், கட்சி மாறும் தலைவர்களைச் சேர்த்துக்கொள்வதும் அடிமட்டக் கட்சி அமைப்புகளின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே அமைதல் வேண்டும். அப்படி இல்லாத வரையில், இதுபோன்ற ஜனநாயகக் கேலிக்கூத்துகள் தொடரத்தான் செய்யும்.
 ஊழலை எதிர்த்துப் பேசும் தார்மிக உரிமையை பாரதிய ஜனதாக் கட்சி இழந்துவிட்டது என்பதற்கு குஷ்வாகா பிரச்னை இன்னொரு உதாரணம், அவ்வளவே!

1 comment: