சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வருங்காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை, யூனிட் 3 ரூபாய்க்கு அல்லது 4 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு' என, மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். டில்லியில் இந்திய எரிசக்தி கருத்தரங்கை துவக்கி வைத்த, மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது: சூரிய ஒளியிலிருந்து முதன் முதலாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட போது, மின்சாரம் யூனிட்டுக்கு 18 ரூபாய் என்ற அடிப்படையில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது அரசின் பல்வேறு முயற்சிகளால், சூரியசக்தி மின்சாரம் 8 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதே மின்சாரத்தை இனி வரும்காலங்களில், யூனிட்டுக்கு 3 ரூபாய் முதல் 4 ரூபாய்க்கு வழங்க வேண்டும் என்பதை, அரசு தன் இலக்காகக் கொண்டுள்ளது. 64 ஆயிரம் மெகாவாட் மேலும், 12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில், 64 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. 10வது ஐந்தாண்டு திட்டம் வரை தயாரிக்கப்பட்ட, மொத்த மின்சாரத்தை விட, தற்போது இரண்டு மடங்கு கூடுதலாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களில் 25 சதவீதம் பேர், மின்சார வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர். மின்சார திருட்டு மற்றும் வினியோகச் சிக்கல்கள் தான், மின்சார பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். மின்சார திருட்டைக் கட்டுப்படுத்த, மின்சாரம் திருடுபவர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மின்சார திருட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.
No comments:
Post a Comment