பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவா ஒரு சிறிய நூலை வெளியிட்டார். "உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு மற்றும் பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் தண்ணீர்' என்ற தலைப்பிலான அந்த நூலில், உலக வங்கி எந்த நோக்கில் சிந்திக்கின்றது என்பதைக் குறித்து அவர் எழுதியிருந்தது இதுதான்:
""....நீர் (குடிநீர்) ஆதாரங்கள், பராமரிப்பு ஆகியவற்றில் தனியார்மயமாக்கும் முயற்சிகளை உலக வங்கி அண்மையில் தொடங்கியுள்ளது. இத் தனியார்மயக் கொள்கையானது, நீர் விநியோகத்தை எல்லா நிலைகளிலும் வணிகமயமாக்குவதைப் பரிந்துரைக்கிறது. அதாவது தனியார் முதலீடு, நீரின் விலையை மிக மிக அதிகமாக உயர்த்துவது, வேளாண் மின்கட்டணத்தை அதிகரிப்பது, குடிநீர் சந்தையை உருவாக்குவது.....''
இந்தக் கட்டுரையில் வந்தனா சிவா தெரிவித்திருந்த மற்றொரு கருத்து:
"" .....மான்சாண்டோ நிறுவனம் இந்தத் தண்ணீர் வணிகத்தில் 2008-ம் ஆண்டில் 420 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி, 63 மில்லியன் டாலர் லாபம் பெறத் திட்டமிடுகிறது.
2010-ம் ஆண்டில் 2.5 பில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் என்று மான்சாண்டோ கருதுகிறது. குறைந்தபட்சம் இந்தியா, சீனா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 30 விழுக்காடு மக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள்.
2025-ம் ஆண்டு இந்தியாவில் நீர்ப் பரப்பு 700 கனசதுர கிலோ மீட்டராக இருக்கும், ஆனால் நீரின் தேவையோ 1,050 கனசதுர கிலோ மீட்டராக இருக்கும். இந்த நீர்த் தட்டுப்பாடு உறுதி செய்யப்பட்ட லாபத்துக்கான ஆதாரம் ஆகும்.....''
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படியெல்லாம் நடக்குமா என்ன? என்று இதழில் கேலிப் புன்னகை விரிய இக்கட்டுரையைப் படித்தவர்கள் நிறைய பேர். இப்போது அந்தக் கேலிக்குக் கேலியாக அமைந்துள்ளது, நீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு ஆலோசனை தொடங்கியுள்ளது என்கிற செய்தி.
நீர் வல்லுநர்களுக்கிடையே ஆலோசனைக்காக தனிச்சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ள 15 பக்க மாதிரி வரைவுத் திட்டத்தில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி- தண்ணீர் விநியோகத்தைப் பொருத்தவரை, தற்போது சேவை வழங்குபவராக இருப்பதிலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதற்குப் பதிலாக, சேவை அளிப்பதில் தனியாரை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறது இந்த வரைவுத் திட்ட சுற்றறிக்கை.
இது முழுக்க முழுக்க, ஏற்கெனவே உலக வங்கி சொல்லி வரும் ஆலோசனைதான். மேலை நாடுகளில் இவ்வாறு குடிநீரை வர்த்தகமயமாக்கவும் குடிநீர் விநியோகத்தைத் தனியார் மயமாக்கவும் செய்யப்பட்டுவிட்டது என்பதால் அதே வணிகத்தை இந்தியாவிலும் நுழைக்கப் பரிந்துரைக்கிறது உலக வங்கி.
உலக வங்கியும் மான்சாண்டோ நிறுவனமும் விரும்புவதுபோல, இந்தியாவில் முழுக்க முழுக்கத் தண்ணீரை வணிக மயமாக்குவது சாத்தியமில்லை என்றாலும், அவர்கள் ஒரு சில பகுதிகளில் நுழைந்து ஆக்கிரமிக்கும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. ஏனென்றால், இந்தியாவில் குடிநீர் விநியோகத்துக்கான திட்டங்கள் அனைத்துக்கும் கடன் அளித்திருப்பது உலக வங்கிதான். தமிழ்நாட்டில் எந்தவொரு நகராட்சியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். உலக வங்கிக் கடனில்தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும். அந்தக் கடனை எந்தவொரு நகராட்சியாகிலும் அடைத்துவிட்டதா என்றால் இல்லை.
குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு கடன் வழங்கியிருக்கும் ஒரே காரணத்தாலேயே, உள்ளாட்சிகள் ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும், ஒவ்வொரு நகரத்துக்கும் ஏற்ப, மாதம் தோறும் இத்தனை ரூபாய் வசூலித்தால் மட்டுமே உங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்று ஒரு ஈட்டிக்காரனைப் போல, உள்ளாட்சி அமைப்புகளை வற்புறுத்திக்கொண்டே இருக்கிறது உலக வங்கி. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அரசியல்வாதிகள், இவ்வாறு குடிநீர் கட்டணத்தைக் கூட்டினால் தங்கள் அரசியல் வலிமை போய்விடும் என்று தள்ளிப்போட்டு வருகின்றனர். ஆனால், நீண்ட நாள்களுக்கு இதைச் செய்ய முடியாது என்பது நிச்சயம்.
வீட்டுக் கடன் கொடுத்த வங்கி, எவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்தாத நபரின் வீட்டைப் பறிமுதல் செய்கிறதோ, அதேபோன்று, அதே நியாயத்துடன், கடனைத் திருப்பிச் செலுத்தாத குடிநீர்த் திட்டத்தை தானே எடுத்துக்கொள்ள உலக வங்கிக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா? தர்க்கரீதியில் யோசித்தால், மறுக்க முடியாது. உலக வங்கி இந்த குடிநீர் விநியோகத்தை தானே செய்யாது. வங்கிகள் வீட்டை ஏலத்தில்விட்டு, பணத்தை மீட்பது போல, இந்த குடிநீர் திட்டங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து அவர்களைக் கட்டணம் வசூலித்துக்கொள்ள அனுமதிக்காது என்பதை உறுதிப்படுத்த யாராவது இருக்கிறார்களா?
வந்தனா சிவா தனது கட்டுரையில் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். அதாவது, 1994-ல் ஆர்ஜென்டீனா அரசின் குடிநீர் நிறுவனத்தை, ஆகஸ் ஆர்ஜென்டீனா என்ற நிறுவனம் வாங்குவதற்காக, உலக வங்கி 172 மில்லியன் டாலர் கடன் கொடுத்தது என்பதுதான் அந்த நிகழ்வு.
எதுவுமே இலவசமாகப் பெற முடியாது. அததற்குக் கட்டணம் செலுத்தத்தானே வேண்டும் என்கிற சந்தைப் பொருளாதாரச் சிந்தனை, பொருளாதார நிலையிலும், கல்வி சமூகத் தளங்களிலும் மேம்பட்ட மேலைநாடுகளிலேயே எடுபடாததால்தான் "வால் ஸ்ட்ரீட்' முற்றுகை போன்ற போராட்டங்கள் அங்கே எழுந்திருக்கின்றன. அரசின் அடிப்படைக் கடமையான சாலை அமைப்பதற்குக்கூடச் சுங்கம் வசூலிக்கப்படும் நிலையில், குடிதண்ணீருக்கு மட்டுமல்ல, பாசன பயன்பாட்டுக்கும்கூடக் கட்டணம் வசூலிக்கும் நிலைமை ஏற்படலாம். ஆனால், மக்கள் அதைத் தலைவிதியே என்று ஏற்றுக் கொள்வார்களா இல்லை கொதித்து எழுவார்களா என்று யாருக்குத் தெரியும்? குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பலர் தயாராக இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, "இப்படியெல்லாம் நடக்குமா?' என்று தோன்றியது. இப்போது "நடந்துவிடுமோ?' என்கிற அச்சம் எழுகிறது.
No comments:
Post a Comment