Wednesday, January 4, 2012

நல்லவராவதும் தீயவராவதும்


மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில்தான் உருவாகின்றன.

  இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.

  தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.

  இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.

  இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் "அப்பா-அம்மாவை அழைத்து வா' என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்றுவிடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.

  இந்த மாணவர்கள் உழைப்பது சரிதான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும். இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு "டாப்-அப்' செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு "டாப்-அப்' செய்வதிலும்தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது.

  தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானதுதான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூகவிரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.

  மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்துக்கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

  பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.

  ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறத

No comments:

Post a Comment