இந்திய வர்த்தகர்களை சீன வர்த்தகர்கள் சிலர் முறையின்றி பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடித்த விவகாரமும் இதில் இந்திய வர்த்தர்களுக்குச் சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுத்தந்த இந்தியத் தூதரக அதிகாரி பாலச்சந்திரன் என்பவரை சீன வர்த்தகர்கள் கடுமையாகத் தாக்கியுள்ள விவகாரமும் சீனா மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளன.
ஷாங்காய் அருகில் உள்ள இவு என்னும் இடத்தில் உள்ள வர்த்தக மையத்தில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரு வர்த்தகர்களையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது என்று நீதிமன்றம் கூறினாலும்கூட, இந்த இருவரும் பாதுகாப்பான இடத்துக்கு வர முடியாத நிலை இருக்கின்றது என்று சொன்னால், இதில் சீன அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. சீன வர்த்தகர்கள் தாக்கும் சூழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால் இருவரையும் ஒரு ஓட்டலில் பாதுகாப்பாகத் தங்க வைத்திருக்கிறோம் என்று சீன அரசு சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை. இந்த இருவரையும் போலீஸ் பாதுகாப்புடன் ஷாங்காய் நகருக்கோ அல்லது இந்தியத் தூதரகத்துக்கோ கொண்டு வந்து சேர்க்காமல், பிரச்னை இருக்கும் அதே இடத்தில் ஓட்டலில் தங்க வைத்திருப்பதைப் பற்றி சொல்வதானால், சீன வர்த்தகர்கள் செய்த அதே செயலை, சீன போலீஸ் நாகரிகமாகச் செய்கின்றது, அவ்வளவுதான். இந்தச் சம்பவத்தை இந்திய அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. தில்லியில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஜாங் யூவை அழைத்து இந்தியாவின் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் இது ஒரு வர்த்தக ரீதியான தகராறு; உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரித்து, இதில் எங்களால் முடிந்த நடவடிக்கையை எடுப்போம் என்று கூறியுள்ளார். எதையும் உறுதிப்பட அவர் கூறவில்லை. கூறவும் முடியாது. இவு வர்த்தக மையத்தில் இந்தியர்கள் பல கோடி டாலர் மதிப்பில் வணிகம் செய்கின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொருள்களைக் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன. இந்தக் கொள்முதலுக்கு பணம் நிலுவைத் தொடர்பாக, ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய இந்த இரு இந்தியர்களும் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டனர். இந்த நிறுவனத்தை நடத்திவந்த நபர் யார் என்பதே தெரியாத நிலைமை இருப்பதும், இந்த நிறுவனத்தின் மற்ற வங்கிக் கணக்குகளை முடக்க முடியாத சூழல் இருப்பதும் இவர்கள் நடத்திய வர்த்தகம் முறையானது அல்ல என்பதைத்தான் காட்டுகிறது. முறையற்ற வர்த்தக நடைமுறைகள்தான் இவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடிக்கக் காரணம் என்றால், இதில் இந்திய அரசு தலையிடாமல் ஒதுங்கியிருப்பதைத் தவிர, வேறு வழியில்லை. அப்பாவி இந்தியர்களுக்காக எந்த இழப்பையும் ஏற்று, காப்பாற்றும் நடவடிக்கை எடுப்பதற்கும், வெளிநாட்டில் முறைகேடாக வர்த்தகம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. இந்திய அரசும் இதில் உண்மை நிலை என்ன என்பதை விசாரித்து, பிறகுதான் நிலைப்பாட்டை மேற்கொள்ள முடியும். இருப்பினும், சீனப் பொருள்கள் கணக்கில்லாமல், கணக்கில் வராமல், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவுக்குள் பல வழிகளில் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. பல ஊர்களிலும் சீனப் பொருள்கள் கண்காட்சியை ஏதோ சாலையோரக் கடைபோல குவித்து வைத்து விற்கும் நிலையைப் பார்க்கின்றோம். இந்தியச் சந்தையைவிட மிகக் குறைவான விலையில் கிடைக்கும் இந்தப் பொருள்கள் முறையாக, சுங்கம் செலுத்தி கொண்டுவரப்பட்டவை அல்ல. இதை நிச்சயமாகச் சொல்லிவிடலாம். சட்டவிரோத வணிகம் இவ்வாறாக இருக்க, சட்டப்படியான வணிகத்திலும் நாம் சீனாவிடமிருந்து அதிகப்படியாகவே இறக்குமதி செய்கின்றோம். 2005-06 நிதியாண்டில் ஏற்றுமதி 676 கோடி அமெரிக்க டாலர்கள் என்றால்,அதே ஆண்டில் சீனாவில் இருந்து இறக்குமதி 1,087 கோடி அமெரிக்க டாலர்கள். இது ஆண்டுக்காண்டு அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர, குறையவில்லை. 2009-10 நிதியாண்டில் சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1,161 கோடி அமெரிக்க டாலர்கள். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட அளவு 3,083 கோடி அமெரிக்க டாலர்கள். இறக்குமதி கூடிக்கொண்டே போகிறது. அந்த அளவுக்கு இந்தியா என்ன உற்பத்தியில் பின்தங்கி இருக்கிறதா? இந்தியாவில் தயாரிக்க முடியாத பொருள்கள் சீனாவில் அப்படி என்ன இருக்கிறது? அவர்கள் உழைப்பூதியத்தைக் குறைத்து, பொருளின் விலையை மிக மலிவாக மாற்றுகிறார்கள் என்பதைத் தவிர, இந்தியப் பொருள்கள் தரத்தில் குறைந்தவையோ அல்லது கிடைக்க முடியாதவையோ அல்ல. இத்தகைய விலை மலிவான பொருள்களை பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லும் வர்த்தகர்கள் சில நேரங்களில் தற்போது நேரிட்டுள்ள சிக்கலைப் போன்ற விவகாரங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். சீன நாட்டினால் இன்னொரு பெரும் பிரச்னை இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியத் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தெரிவித்துள்ள கருத்துப்படி, இந்தியாவில் முன்னிலையில் உள்ள வர்த்தக நிறுவன இலச்சினைகளின் பெயரில் சீன வர்த்தக நிறுவனங்கள் போலியான பொருள்கள் தயாரித்து இந்தியாவில் விற்கிறது அல்லது சீனாவிலிருந்து கடத்தி வரப்படுகிறது. மத்திய சுங்கத் தீர்வைத் துறை உயர் அதிகாரி எஸ்.கே. கோயல் அளித்த பேட்டியில் சீனாவின் பிரச்னை பெரும் பிரச்னையாகி வருகிறது என்று கூறியுள்ளார். இவ்வாறான, போலி தயாரிப்பு, கடத்தல், முறையற்ற வர்த்தகம் ஆகியவற்றால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு ரூ.22,500 கோடி என்றும் உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகமயம் என்கிற பெயரில் இந்திய நிறுவனங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் சென்று தொழில் நிறுவனங்களை நடத்த "காட்' உதவும் என்று கூறி அதை இந்தியாவின்மீது திணித்ததால் கிடைத்த பலன்தான் என்ன? விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய இந்திய முதலாளிகளும் நிறுவனங்களும் உலக அரங்கில் செயல்படுகின்றன. உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறும் பேறு பெற்றுவிட்டனர். ஆனால், உலகமெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்கள் இந்தியச் சந்தையைப் பயன்படுத்திக் கொழிக்கின்றன. மொத்தத்தில் இது இன்னொருவிதமான அறிவுபூர்வச் சுரண்டல்! சீனப் பொருள்கள் என்றில்லை, உலக நாடுகள் எதிலிருந்தும் எதையும் இறக்குமதி செய்வதை நாம் தடுக்க முடியாத வகையில் "காட்' ஒப்பந்தம் நமது கைகளைக் கட்டிப் போட்டு விட்டிருக்கிறது. ஆனால், போலித் தயாரிப்புகளையும், கடத்தல்களையும்கூடவா நம்மால் தடுக்க முடியாது? இரு இந்திய வர்த்தகர்களை மீட்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் இந்திய வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு உள்ளது.
nanri dinamani
No comments:
Post a Comment